டிரெண்டிங்

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த புகாரில் நத்தம் விஸ்வநாதன் மீது போலீசார் வழக்குப்பதிவு

kaleelrahman

நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் வாக்காளர்களுக்கு வாக்களிக்க லஞ்சம் கொடுத்ததாக 171இ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் 5வது முறையாக போட்டியிடுகிறார். இவர் கடந்த 15ஆம் தேதி நத்தம் தொகுதிக்கு உட்பட்ட காட்டு வேலாம்பட்டி பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் வேட்பாளர் விஸ்வநாதனுக்கு ஆரத்தி எடுத்தனர்.

இதையடுத்து அங்கு வந்த அதிமுகவை சேர்ந்த நபர் ஆரத்தி தட்டில் பணம் போடுவதும், அதேபோல் வேட்பாளர் விஸ்வநாதன் தனது சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து ஒருவருக்குக் கொடுக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுதொடர்பாக தேர்தல் பிரிவு வீடியோ கண்காணிப்பு குழு தலைவர் மைக்கேல் ஆரோக்கியதாஸ், நேற்று நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் வாக்காளர்களுக்கு வாக்களிக்க லஞ்சம் கொடுத்ததாக 171இ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.