டிரெண்டிங்

புகாரளிக்க வந்த பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு - பிடிபட்ட காவலர் பணியிடை நீக்கம்

webteam

கிருஷ்ணகிரியில் புகாரிகளிக்க வந்த வேறொருவர் மனைவியுடன் தகாத உறவு வைத்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள தளி அடுத்த தேவகானப்பள்ளியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (35). இவரது மனைவி அனிதா (28). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மஞ்சுநாத்துக்கு குடிப்பழக்கம் உள்ளதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு ஏற்படும் போதெல்லாம் போலீசாருக்கு போன் செய்வதை அனிதா வழக்கமாக வைத்திருந்துள்ளார். அந்த வகையில் கடந்த 11ஆம் தேதி தகராறு ஏற்பட்டபோது, போலீசாருக்கு அனிதா போன் செய்ய, அவர்கள் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்துள்ளனர்.

இதையடுத்து தளி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஷாம்குரு (26), அனிதாவிடம் அடிக்கடி போன் செய்து பேசியுள்ளார். அத்துடன் மஞ்சுநாத் வீட்டிற்கு விசாரணை என்ற பெயரில் வந்து சென்றதாக கூறப்படுகிறது. கடந்த 20ம் தேதி இரவும் மஞ்சுநாத் வீட்டிற்கு காவலர் ஷாம்குரு சென்றுள்ளார். நள்ளிரவில் மஞ்சுநாத் வீடு திரும்பியபோது, வீட்டில் யாரோ இருப்பதை தெரிந்துகொண்டு, வெளிப்புறம் கதவை பூட்டியுள்ளார். பின்னர் ஊர் மக்களை அழைத்துள்ளார். அத்துடன் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தார்.

மஞ்சுநாத் வீட்டிற்கு வந்த தளி காவல்நிலைய போலீசார், கதவை திறந்து பார்த்தபோது அனிதாவுடன் காவல் ஷாம்குரு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கிராம மக்களை சமாதானம் செய்து, காவலரை போலீசார் அழைத்துச்சென்றனர். மறுநாள் மஞ்சுநாத் காவல் நிலையத்திற்கு சென்று தன் வாழ்க்கையை போலீசார் நாசம் செய்து விட்டதாக சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. பின்னர் காவல்நிலையம் முன்பு குடிபோதையில் லுங்கியில் தூக்கிட்டு மஞ்சுநாத் தற்கொலை செய்ய முயன்றதாக கூறி, அவரை போலீசார் ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தற்போது சிகிச்சையில் உள்ள மஞ்சுநாத்தை யாரையும் காணவிடாமல் போலீசார் தடுப்பதாக, அவரது அண்ணன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மஞ்சுநாத் உண்மையிலையே தற்கொலை முயற்சி செய்தாரா ? அல்லது போலீசார் அவரை அடித்து உதைத்து மருத்துவமனையில் சேர்த்தனரா ? என்று சந்தேகம் எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டிகங்காதர், சம்பந்தப்பட்ட காவலரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கிதா தலைமையிலான போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.