டிரெண்டிங்

கமல்ஹாசன், ராதாரவி மீது போலீசார் வழக்குப்பதிவு

webteam

கோவையில் தேர்தல் பரப்புரையின்போது இந்து மத கடவுளை அடையாளப்படுத்தி வாக்குசேகரித்ததாக கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று கமல்ஹாசனை விமர்சித்த ராதாரவி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி கோவை தெற்கு தொகுதிகுட்பட்ட ராம்நகர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, ராமர் மற்றும் அம்மன் வேடமிட்டு இருவர் அந்த பரப்புரையில் கலந்துகொண்டனர். இதுபோன்று இந்து மத கடவுள்களை அடையாளப்படுத்தி பரப்புரை மேற்கொண்டதற்காக சுயேட்சை வேட்பாளர் பழனிகுமார் என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி கோவை காட்டூர் காவல்துறையினர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதேபோல் கடந்த 28 ஆம் தேதி பாஜக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து ராதாரவி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறாக பேசியதாக பாஜக பேச்சாளர் ராதாரவி மீது புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் கோவை பந்தயசாலை காவல்துறையினர் ராதாரவி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.