வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், வேலையிழப்பு பொருளாதாரத்திற்கு நல்ல அறிகுறி என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் கடந்த மூன்றாண்டு காலமாக வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல சில தொழில் நிறுவனங்களே இந்த விமர்சனத்தை முன் வைத்துள்ளது. குறிப்பாக ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையால் சிறு மற்றும் குறு தொழில்கள் முற்றிலும் முடங்கியுள்ளதாக பொருளாதார ஆலோசகர்கள் கூறி வருகின்றனர்.
இதனிடையே, உலகப் பொருளாதார அமைப்பு சார்பில் டெல்லியில் இந்தியப் பொருளாதாரம் குறித்த மூன்று நாள் மாநாடு அக்டோபர் 4 முதல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் சேர்மன் சுனில் மிட்டல் பேசுகையில், “இந்தியாவின் மிகப்பெரிய 200 தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இல்லை. இதனால் பல லட்சக் கணக்கானோர் பாதிக்கப்படுவர். சிறிய மற்றும் குறுந்தொழில் செய்பவர்களுக்கு எளிதில் வங்கிக் கடன் கிடைப்பதில்லை. நாட்டில் உருவாகும் சொத்துக்களின் பங்கு சமுதாயத்தின் எல்லாப் பிரிவினருக்கும் சரியாகப் போய்ச் சேரவில்லை” என்று கூறினார்.
இதற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் பதில் அளிக்கையில், “இந்திய இளைஞர்கள் இன்று வேலை தேடுபவர்களாக இல்லை. வேலை வாய்ப்பை உருவாக்குபவர்களாக இருக்கிறார்கள். தற்போது நாட்டில் உள்ள ஏராளமான இளைஞர்கள் தொழில் முனைவோராக மாறவிரும்புகிறார்கள். 3டி தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றால் தொழில்துறையில் இருந்து மனித உழைப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதனால், வேலையிழந்தவர்கள் கடன் பெற்று சிறு தொழில் தொடங்கும் நேரம் இது” என்று தெரிவித்தார்.