தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளில் 3 இடங்களை முஸ்லீம், கிறிஸ்தவர்கள் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 9 தொகுதிகளில் 3 தொகுதிகளை மத சிறுபான்மை, மொழி சிறுபான்மை மற்றும் சமூக சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த தகுதியான காங்கிரஸ் நண்பர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கிறிஸ்தவர், ஒரு முஸ்லிம், தெலுங்கை மொழியாகக் கொண்ட ஒருவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என ராகுலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பீட்டர் அல்போன்ஸ் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை வாக்கு வங்கி சிறுபான்மை மக்களே என்றும் அதனால் கன்னியாகுமரி தொகுதி ஒரு கிறிஸ்தவ காங்கிரஸ் நண்பருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது தனது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. அதில், புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.