125 கோடி மக்களின் மனநிலை மாறாமல் தூய்மை இந்தியா திட்டம் சாத்தியமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. அதே ஆண்டு தூய்மை இந்தியா என்ற ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தை காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி மோடி தொடங்கி வைத்தார். நேற்றுடன் இந்த திட்டம் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
காந்தியின் 149-வது பிறந்தநாளான இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு குறித்து விஞ்ஞான் பவனில் உரையாற்றினார். அப்போது மோடி பேசியதாவது:-
- தூய்மை இந்தியா திட்டம் ஒரு மக்கள் இயக்கம்
- தூய்மை இந்தியா திட்டத்தை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.
- தூய்மையான இந்தியாவை மக்களால் தான் கனவு காண முடியும். தலைவர்களால் முடியாது.
- ஆயிரம் மகாத்மாக்கள் மற்றும் லட்சக்கணக்கான பிரதமர்களால் தூய்மையான இந்தியாவை வழங்க முடியாது. 125 கோடி மக்களால் தான் முடியும்.
- மக்கள் மனநிலை மாறாமல் தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கத்தை அடைய முடியாது.
- 125 கோடி மக்களும் ஒரே புள்ளியில் இணைந்தால் எந்த திட்டத்தையும் எளிதில் நிறைவேற்றி விடலாம்
- தூய்மையின் தேவையை யாரும் மறுக்க முடியாது. ஆனால் தாங்களாக முன் வந்து செய்வதில்லை
- என்னை விமர்சனம் செய்யுங்கள், ஆனால் தூய்மை விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்.
- தூய்மை இந்தியா திட்டத்திற்கு எதிரான பிரச்சாரத்தை ஊடகங்கள் வெளியிடுகின்றன.