விருதுநகர் அருகே போடாத சாலைக்கு அரசு அலுவலர்கள் கணக்கு காட்டிய விஷயம், தகவல் அறியும் உரிமை சட்டத்தால் தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெள்ளூர் அருகே உள்ள அம்மன் கோவில்பட்டி மற்றும் மேலமாத்தூர் பகுதியில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டி, பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்காக அரசு சார்பில் திட்டமிடப்பட்டு 2012-ஆம் ஆண்டு அம்மன் கோவில்பட்டி பகுதிக்கு ரூபாய் 4,80,000 மற்றும் மேலமாத்தூர் பகுதிக்கு ரூபாய் 3,50,000 மதிப்பீட்டில் தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்பந்தம் போடப்பட்டு திட்டம் தயார் செய்யப்பட்டது. ஆனால் 8 ஆண்டுகள் கழித்து தற்போது வரை அப்பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தப்படாமல் அதே நிலையே நீடிக்கிறது.
இது தொடர்பாக இப்பகுதி மக்கள் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் கேட்டபோது போடாதா சாலைக்கு கணக்கு காட்டப்பட்டதோடு இத்திட்டத்திற்கான மதிப்பு தொகைக்கும் செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதே போல இப்பகுதி பொதுமக்கள் 2017ஆம் ஆண்டு மயான வசதி ஏற்படுத்தி தர கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தற்போது வரை அந்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பாதாள சாக்கடை திட்டமும் நிறைவேற்றப்படாமல் உள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே முறையான சாலை மற்றும் பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்தி தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.