ரஃபேல் விமான ஊழல் விவகாரத்தில் அதிமுக எம்பிக்கள் பிரதமர் மோடியை பாதுகாக்கின்றனர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற குளர்காலக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் கூட்டத் தொடர் தொடங்கியது முதலே மேகதாது, கஜா நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இரு அவைகளிலும் அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரஃபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மக்களவையில் பேசினார். ஆனால், அதிமுக எம்.பிக்கள் இன்றும் அவையை நடத்த விடாமல் தொடர் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளியால் மக்களவை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.
ராகுல் காந்தி பேசுகையில், “ரஃபேல் ஒப்பந்தம் குறித்த விவாதத்தை அதிமுக எம்பிக்கள் நடத்த விடாதது வேதனையளிக்கிறது. பாஜகவின் கூட்டணி கட்சிகளை விட அதிமுக பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுகிறது. பாதுகாப்புத்துறை அமைச்சர், அதிமுக எம்பிக்களின் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “ரஃபேல் விமானத்தின் எண்ணிக்கையை திடீரென குறைத்தது ஏன்? 126 விமானங்களுக்குப் பதில் 36 விமானங்கள் மட்டுமே வாங்க முடிவெடுத்தது எப்படி? ரூ.526 கோடி என்ற விலையிலிருந்து ரூ.1,600 கோடிக்கு விலை உயர்ந்தது ஏன்? பல்வேறு போர் விமானங்களை அரசின் ஹெச்ஏஎல் நிறுவனம் தயாரித்துள்ளது. அதற்கு ஏன் ஒப்பந்தத்தை வழங்கவில்லை. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்க வேண்டும் என பிரதமர் நிர்பந்தித்தாரா?” என்று அடுக்கடுக்காக அவர் கேள்விகளை எழுப்பினார்.
அதோடு, தனது கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி வலியுறுத்தினார். பிரதமர் மோடி மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.