டிரெண்டிங்

எதிர்பார்த்த பணம் கிடைக்காததால் ரஃபேலை காங். கைவிட்டது - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

எதிர்பார்த்த பணம் கிடைக்காததால் ரஃபேலை காங். கைவிட்டது - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

rajakannan

தேச பாதுகாப்பை பற்றிய கவலையே இல்லாமல் ரபேல் ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு நிறுத்தியதாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் பாஜக தலைமையிலான அரசு ஊழல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகின்றது. ஆனால், ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்று பாஜக தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் எதிரொலித்து வருகிறது. 

இந்நிலையில், தேச பாதுகாப்பை பற்றிய கவலையே இல்லாமல் ரபேல் ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு நிறுத்தியதாகவும், எதிர்பார்த்த பணம் கிடைக்காததுதான் இதற்கு காரணம் என்றும் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களவையில் நடந்த காரசார விவாதத்தின் போது நிர்மலா சீதாராமன் இக்குற்றச்சாட்டை முன் வைத்தார். முதல் ரபேல் விமானம் இந்தியாவுக்கு வரும் செப்டம்பர் மாதம் வந்து சேரும் என்றும் 2022ம் ஆண்டுக்குள் அனைத்து 36 ரபேல் விமானங்களும் வந்து சேரும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லை என்பதற்காக ரபேல் ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு நிறுத்தியது. தேசத்தின் பாதுகாப்பை பற்றி சற்றும் கவலைப்படாமல் ரபேல் ஒப்பந்தத்தை காங்கிரஸ் நிறுத்தியது. ராணுவ பலத்தை பெருக்குவதில் காங்கிரஸ் அரசு மந்தமாக செயல்பட்டது. மோடி தலைமையிலான அரசு படைபலத்தை விரைந்து பெருக்கி வருகிறது. சீனா, பாகிஸ்தான் படைபலத்தை பெருக்கும் நிலையில், நாமும் படைகளை வலுப்படுத்துகிறோம்” என்று விளக்கம் அளித்தார்.

முன்னதாக ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். மேலும், தன்னுடைய நண்பரும், சர்வதேச கடன் மாஸ்டருமான அனில் அம்பானிக்கு ரஃபேல் ஒப்பந்தத்தை கொடுத்ததன் மூலம் நாட்டின் பாதுகாப்பை மோடி வலிமைகுன்ற செய்துள்ளார் என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.