டிரெண்டிங்

காஷ்மீரின் பிரச்னைக்கு நேருதான் காரணம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு

காஷ்மீரின் பிரச்னைக்கு நேருதான் காரணம் - மக்களவையில் அமித்ஷா பேச்சு

rajakannan

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் பிரச்னைக்கு நேருவே காரணம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

இதுகுறித்து மக்களவை பேசிய அமித்ஷா, “நாங்கள் 356 சட்டப்பிரிவை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியதில்லை. முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கை மற்றும் சிறைச்சாலைகளை பலப்படுத்துதல் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த உதவும். காஷ்மீரில் இளைஞர்களை குறிவைத்து அவர்களிடம் இந்தியாவுக்கு எதிரான பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. எங்களுடைய அரசில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுகிறது. ஆனால், எப்படி போராடுகிறோம் என்பதில்தான் வித்தியாசம் இருக்கிறது.

நாங்கள் பயங்கரவாதிகள் இருக்கும் இடங்களையே குறிவைத்து வான்வெளி தாக்குதல் மற்றும் சர்ஜிகல் தாக்குதல் நடத்தியுள்ளோம். இதில், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. நாட்டை பாதுகாக்கவே தாக்குதலை நடத்துகிறோம். மதத்தின் அடிப்படையில் நாடு பிளவுபடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். காஷ்மீரில் நிலவும் பிரச்னைக்கு ஜவஹர்லால் நேருவே காரணம். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சர்தால் படேல் மீது அவர் நம்பிக்கை வைக்கவில்லை. எல்லா சுதேச பிரதேசங்களும் சர்தார் தலைமையில் பிரிக்கப்பட்டுவிட்டது. ஆனால், நேரு கையாண்ட ஜம்மு-காஷ்மீருக்கு மட்டும் 370 சட்டபிரிவு பயன்படுத்தப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்தும் ஜனநாயகத்தின் பேரில் நடைபெற்ற நகைச்சுவை”

முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க செய்யும் மசோதாவை மக்களவையில் அமித்ஷா தாக்கல் செய்தார்.