டிரெண்டிங்

3 மகன்கள் இருந்தும் உணவுக்கு வழியின்றி பெற்றோர் தற்கொலை..!

webteam

மதுரையில் 3 மகன்கள் இருந்தும் வயதான தம்பதியினர் உணவிற்கே வழியின்றி விரக்தியில் தற்கொலை செய்துகொண்டனர்.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் வைகை காலனி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மச்சக்காளை - பசுபதி. இவர்கள் தனியாக வீட்டின் மாடியில் வசித்து வந்தனர். இவர்களது மூன்று மகன்களும் திருமணம் ஆகி தனித்தனியே மதுரை, கோவை, சவுதி அரேபியா என வசித்து வருகின்றனர். மதுரையில் வசித்து வந்த மூன்றாவது மகன் கூட, இந்தத் தம்பதியினரின் உணவிற்கு உதவவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த தம்பதியினர் இன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்த சமயநல்லூர் காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் தற்கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகன்கள் பராமரிக்காமல் விட்டதால் தாய் - தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வல்ல. எனவே தற்கொலை எண்ணம் தோன்றினால் கீழ்க்கண்ட நிறுவனத்திற்கு தொடர்பு கொள்ளவும்..

சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை,

ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060)