டிரெண்டிங்

“அடிப்படை புரிதல்கூடஇல்லாதவர் ராகுல்” - அருண் ஜெட்லி பதிலடி

“அடிப்படை புரிதல்கூடஇல்லாதவர் ராகுல்” - அருண் ஜெட்லி பதிலடி

rajakannan

போர் விமானம் என்றால் என்ன என்ற அடிப்படை புரிதல்கூட இல்லாதவர் ராகுல் காந்தி என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவையில் இன்று பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரஃபேல் ஊழல் விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பிரதமரின் பிரான்ஸ் பயணத்துக்குப் பிறகு ரஃபேல் விமானங்களின் விலை உயர்த்தப்பட்டது ஏன்? என்பது உள்ளிட்ட தன்னுடைய கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். \

பின்னர் ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அருண் ஜெட்லி, புரிதல் இல்லாமல் ராகுல் காந்தி பேசுவதாக குற்றம்சாட்டினார். மேலும், “ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் உண்மையை காங்கிரஸ் விரும்பவில்லை. பிரான்ஸ் முன்னாள் அதிபருடன் பேசியது தொடர்பான பழைய தகவலையே ராகுல் தற்போதும் கூறுகிறார். பொய்யான தகவலையே ராகுல்காந்தி மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

தொலைபேசி உரையாடல் உள்ளதாக ராகுல் கூறுகிறார். ஆனால் அதன் நம்பகத்தன்மை என்ன?. போர் விமானம் என்றால் என்ன என்ற அடிப்படை புரிதல்கூடஇல்லாதவர் காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். ரஃபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி கடந்த 6 மாதமாக தவறான தகவல்களையே அளித்து வருகிறார். முன்னாள் அதிபர் ஹோலாந்த் கூறியதாக வெளியான தகவலை பிரான்ஸ் அரசே மறுத்துவிட்டது” என்று அருண்ஜெட்லி விளக்கம் அளித்தார்.

முன்னதாக ராகுல் காந்தி பேசுகையில், “ரஃபேல் விமானத்தின் எண்ணிக்கையை திடீரென குறைத்தது ஏன்? 126 விமானங்களுக்குப் பதில் 36 விமானங்கள் மட்டுமே வாங்க முடிவெடுத்தது எப்படி? ரூ.526 கோடி என்ற விலையிலிருந்து ரூ.1,600 கோடிக்கு விலை உயர்ந்தது ஏன்? பல்வேறு போர் விமானங்களை அரசின் ஹெச்ஏஎல் நிறுவனம் தயாரித்துள்ளது. அதற்கு ஏன் ஒப்பந்தத்தை வழங்கவில்லை. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்க வேண்டும் என பிரதமர் நிர்பந்தித்தாரா?” என்று அடுக்கடுக்காக அவர் கேள்விகளை எழுப்பியிருந்தார்.