காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் இன்று பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இனி களமிறங்கும் அனைத்து போட்டிகளையும் வாழ்வா சாவா கட்டத்தில் எதிர்கொள்ளவுள்ள பஞ்சாப் மற்றும் முதலிடத்தை தக்க வைக்க டெல்லி அணி முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டெல்லி அணிக்கு வலு சேர்க்கும் செய்தி வந்துள்ளது.
அதாவது ஷார்ஜாவில் அக்டோபர் 9 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ரிஷப் பன்ட் காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் டெல்லி அணிக்காக கடந்த 3 போட்டிகளில் விளையாடவில்லை. அப்போது பேட்டியளித்த டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் " ரிஷப் பன்ட்க்கு குறைந்தபட்சம் ஒரு வாரம் ஓய்வு அளிக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்’ என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு உடற்தகுதி சோதனை நடத்தப்பட்டது. இதில் ரிஷப் பன்ட் பாஸாகி இருக்கிறார். மேலும் அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். இதனையடுத்து பஞ்சாபிற்கு எதிராக இன்றையப் போட்டியில் ரிஷப் பன்ட் களமிறங்குவார் எனக் கூறப்படுகிறது.