சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சி தலைவர் அமிர்தம் இன்று தேசியக் கொடியேற்றினார் . ஆட்சியர் மகேஸ்வரி, எஸ்.பி.அரவிந்தன் முன்னிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றினார் அமிர்தம்.
முன்னதாக, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் சுதந்திர தினத்தன்று கொடியேற்றுவற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஊராட்சிமன்ற தலைவரான அமிர்தம், பட்டியலினத்தவர் என்பதால், அவரை தேசிய கொடியேற்ற விடாமல் ஊராட்சிமன்ற செயலாளர் சசிகுமாரும், துணைத் தலைவரின் கணவர் விஜயகுமார் உள்ளிட்டோர் தடுத்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற புதிய தலைமுறை செய்தியாளர் எழில் மீதும் ஊராட்சிமன்றச் செயலாளர் சசிகுமார் உள்பட 5 பேர் தாக்குதல் நடத்தியதில் அவரது கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஊராட்சிமன்றச் செயலாளர் சசிகுமார், ஊராட்சிமன்ற துணைத் தலைவரின் கணவர் விஜயகுமாரை காவல்துறையினர் ஏற்கெனவே கைது செய்துள்ளனர். தேசிய கொடியை ஏற்றவிடாமல் தடுத்த புகாரில் ஊராட்சி மன்ற செயலாளர் பொறுப்பில் இருந்து சசிகுமார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உறுதிபடுத்தியுள்ளார். இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் ஆட்சியர், எஸ்.பி ஆகியோர் அறிக்கையளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.