பி.எம் கேர் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஐந்துநாளில் மூவாயிரத்து 76 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்று அதன் இணையதளத்தின் தணிக்கை அறிக்கையில் தற்போது வெளியாகியுள்ளது.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி இந்தியாவிலும் மார்ச் மாத இறுதியில் தொற்றிக்கொண்டது. கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பிரதமர் மோடியால், கடந்த மார்ச் 27 ஆம் தேதி பி.எம் கேர் ஆரம்பிக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் நிதி அளிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கையை ஏற்று பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களும் முன்னணி நடிகர்களும் மக்களும் நிவாரண உதவிகளை உடனுக்குடன் அளித்தார்கள். ’ஏற்கனவே, இருக்கும் பிரதமர் தேசிய நிவாண நிதி அமைப்பை விட்டுவிட்டு புதிதாக ஏன் ஆரம்பிக்கவேண்டும்? எவ்வளவு பணம் பி.எம் கேர் நிதியில் சேர்ந்துள்ளது?’ என்று எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தன.
கடந்த கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக, எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது என்பதற்கு பதில் சொல்லாமல் அமைதி காத்து வந்த மத்திய அரசு தற்போது பி.எம் கேர் இணையதளத்தில் முதல் ஐந்து நாட்களில் எவ்வளவு நிதி சேர்ந்தது என்ற தகவலை வெளியிட்டுள்ளது. அந்தத் தகவலில் பி.எம் கேர் நிவாரண நிதிக்கு முதல் ஐந்து நாளில் மட்டுமே 3 ஆயிரத்து 76 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்று தணிக்கை அறிக்கை கூறுகிறது. இந்நிலையில்,
”பி.எம் கேர் நிதிக்கு முதல் ஐந்து நாளில் மூவாயிரத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வந்துள்ளது. நன்கொடை பெற்றவர்களும் பி.எம் கேர் நிதி காப்பாளர்களும் யார் என்பது தெரியும்போது நன்கொடையாளர்களின் பெயர்களை வெளியிடாமல் இருப்பது ஏன்?” என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.