திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டிருப்பது அரசியல் உள்நோக்கம் உடையது என திருத்துறைப்பூண்டியில் முத்தரசன் பேட்டியளித்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது... மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து வருமானவரித்துறையை தவறான முறையில் பயன்படுத்தி திமுகவின் முன்னணித் தலைவர்கள் மீது சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் சோதனை மேற்கொண்டிருப்பது அரசியல் உள்நோக்கம் உடையது. இதுவரை வந்த கருத்துக் கணிப்புகள் அனைத்தும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என திரும்பத் திரும்ப வருகிறது. இத்தகைய சோதனைகள் மூலம் எங்கள் வெற்றியை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது" எனத் தெரிவித்தார்