தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சருக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், 22 எம்எல்ஏ-க்கள் முதலமைச்சர் மீது நம்பிக்கையை இழந்து ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளதை குறிப்பிட்டுள்ளார். எனவே முதலமைச்சர் பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக கூறியுள்ள அவர், அதனால் உடனடியாக சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பேரவையை கூட்ட தாமதம் செய்வது, குதிரை பேரத்திற்கு வழிவகை செய்யும் என தெரிவித்துள்ள ஸ்டாலின் கர்நாடகாவில் இதுபோன்ற சூழல் ஏற்பட்ட போது ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.