டிரெண்டிங்

“வாய் சிவக்க வெற்றிலை; உங்கள் வாழ்க்கை சிறக்க இரட்டை இலை” : ரவீந்திரநாத்

“வாய் சிவக்க வெற்றிலை; உங்கள் வாழ்க்கை சிறக்க இரட்டை இலை” : ரவீந்திரநாத்

webteam

தமிழகத்தில், ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடக்கிறது. அதே நாளில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது. இதையடுத்து அதிமுக மற்றும் திமுக கட்சிகளும் அதன் கூட்டணி கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளன. தமிழகத்தில் உள்ள மேலும் பல கூட்டணி கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறன. அதன்படி அதிமுக சார்பாக தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் தீவர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட தி.விலக்கு, வடுகபட்டி, இராமநாதபுரம், கட்டத்தேவன்பட்டி, கள்ளபட்டி தும்மக்குண்டு பகுதிகளில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மற்றும்  உசிலம்பட்டி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கிராம் கிராமமாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். 

இப்பிரச்சரத்தின் போது அந்தந்த பகுதியிலுள்ள அதிமுகவினர் குறிப்பாக பெண்கள், வேட்பாளர் பிரச்சாரத்திற்கு வரும்போது ஆராத்தி எடுத்து வருகின்றனர். அப்போது நீங்கள் எடுக்கும் ஆரத்தியில் உள்ள வெற்றிலை, “வாய் சிவக்கத்தான் வெற்றிலை உங்கள் வாழ்க்கை சிறக்க இரட்டை இலை தேர்ந்தெடுங்கள்” என மக்களிடையே பேசி வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் வெளியூர்காரர். மற்றொருவர் இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெற்று, அந்த இரட்டை இலை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிற்கின்றவர். நான் உங்களில் ஒருவனாக மகனாகவும், சகோதரனாகவும் இருந்து பாடுபடுவேன் எனக் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர்.