டிரெண்டிங்

தினகரன், திமுக கூட்டு சதி செய்து வெற்றி: ஓபிஎஸ் ஈபிஎஸ் அறிக்கை

தினகரன், திமுக கூட்டு சதி செய்து வெற்றி: ஓபிஎஸ் ஈபிஎஸ் அறிக்கை

rajakannan

திமுகவும், டிடிவி தினகரனும் செய்த கூட்டு சதியே தேர்தல் முடிவு என்று ஈபிஎஸ் - ஓபிஎஸ் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் விமர்சித்துள்ளனர். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சி சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் 89,013 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.

தேர்தல் முடிவு குறித்து ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இரட்டை இலை சின்னத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி. பண பலத்திற்கு அடிபணியாமல் அதிமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி. அதிமுக தொண்டர்களை பிளவுபடுத்தவோ, கட்சியை அசைத்துவிடவோ யாராலும் முடியாது. 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக தான் தோல்வி அடைந்துள்ளது. தன்னுடைய வாக்குகளை தினகரனுக்கு விற்றுவிட்டார் ஸ்டாலின். திமுகவுடன் கைகோர்த்து தினகரன் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறார். தினகரனும், திமுகவும் ஒப்பந்தம் செய்து பெற்ற வெற்றியை ஒத்துக் கொள்ள முடியாது. இது அதிமுகவுக்கு சரிவை ஏற்படுத்தாது. இடைத்தேர்தல் முடிவு வேறு எந்த தொகுதிக்கும் பொருந்தாது. நூதன முறையில் பணம் கொடுத்து தினகரன் பார்முலா என்ற தீயச்செயல் உருவாக்கப்பட்டுள்ளது. பரப்புரை நாளில் ரூ.20 நோட்டை கொடுத்து மக்களை நம்ப வைத்து வெற்றி பெற்றுள்ளார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.