டிரெண்டிங்

தர்ம யுத்தத்திற்கு அடித்தளம் போட்ட நாள் இன்று..!

தர்ம யுத்தத்திற்கு அடித்தளம் போட்ட நாள் இன்று..!

Rasus

தமிழக அரசியலை உற்றுநோக்குபவர்களால் இந்த நாளை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. தமிழக அரசியலில் பல குழப்பங்கள் ஏற்பட்ட நாள். தர்மம் வெல்லும் எனக் கூறிக்கொண்டு முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதல்வருமான ஓபிஎஸ் தனது தர்ம யுத்தத்தை தொடங்க அடித்தளமிட்ட நாள் இன்று தான். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அன்றைய தினம் இரவே ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார்.

ஆனால் ஜெயலலிதா பொறுப்பு வகித்து வந்த அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவி காலியாகவே இருந்து வந்தது. இதனையடுத்து 2016ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் டிசம்பர் 31ம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து முதல்வர் பொறுப்பையும் சசிகலா ஏற்க வேண்டும் என சில அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் வெளிப்படையாகவே கோரிக்கை வைத்து வந்தனர்.

இதனையடுத்து பிப்ரவரி 5ம் தேதி தமிழக முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஓ.பன்னீர்செல்வம் அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார். அன்றைய தினமே சசிகலா சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் தமிழகத்தின் 21-வது முதல்வராக பதவியேற்கவும் தயாராக இருந்தார்.

ஆனால் பிப்ரவரி 7-ம் தேதி இரவு 8.50 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாதுகாப்பு போலீஸாருடன் திடீரென மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வந்தார். நினைவிடத்தின் முன்பு அமர்ந்த அவர், மவுனமாக கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். 40 நிமிடங்கள் தியானத்தில் இருந்த அவர், பின்னர் கண்கலங்கியபடி எழுந்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்,  என்னை கட்டாயப்படுத்தியதால்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் என்று கண்ணீர் மல்க கூறினார். மக்களும் தொண்டர்களும் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் பெறுவேன் என்றும் அறிவித்தார். “தனிமனிதனாக நின்று போராடுவேன், தகுதியுள்ளவர் தமிழகத்தை ஆள வேண்டும். தனது தர்ம யுத்தம் தொடரும்” என்றும் கூறினார்.

அதன்பின் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல நேர்ந்ததால், அவரது ஆதரவுடன் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி. பின்னர் சசிகலா அணியில் இருந்த டிடிவி தினகரனுக்கும் பழனிசாமிக்கும் இடையே உட்பகை எழவே மீண்டும் முதலமைச்சர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கைகோர்த்துக்கொண்டனர். தற்போது தமிழக துணை முதலமைச்சராக ஓபிஎஸ் பதவி வகித்து வருகிறார். அந்த வகையில் ஓபிஎஸ் பதவி விலகியே இந்த நாளே அவர் தர்ம யுத்தம் தொடர அடித்தளமிட்ட நாள் என்றே கருதலாம்.