டிரெண்டிங்

முன்னாள் எம்எல்ஏ., எம்பிக்களுக்கு இடம் கொடுக்கும் அமமுக! வியூகம் என்ன?

webteam

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும், அமமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் பதவி இழந்த 4 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பெயர் இடம்பெறவில்லை.

அடுத்த மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். 15 பேர் கொண்ட இப்பட்டியலில் 3 முன்னாள் அமைச்சர்கள், 2 முன்னாள் எம்.பி.க்கள், 8 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர்.

தகுதிநீக்கத்தால் பதவி இழந்த பழனியப்பன், ரங்கசாமி, பார்த்திபன், முருகன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.அன்பழகன், பாப்பிரெட்டிபட்டியில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், பாபநாசம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ரங்கசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழனும் ஸ்ரீரங்கத்தில் முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரனும், மடத்துக்குளம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.சண்முகவேலுவும் களம் காண்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே.உமாதேவனும், சோளிங்கரில் என்.ஜி.பார்த்திபனும், வீரபாண்டியில் வீரபாண்டி எஸ்.கே.செல்வமும் போட்டியிடுகின்றனர்.உசிலம்பட்டியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஐ.மகேந்திரன், கோவை தெற்கு தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.துரைசாமி என்ற சாலஞ்சர்துரை, அரூரில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.ஆர்.முருகன் ஆகியோர் களம் காண்கின்றனர். பொள்ளாச்சியில் முன்னாள் எம்.பி. கே.சுகுமாரும், தருமபுரியில் டி.கே.ராஜேந்திரனும், புவனகிரியில் கே.எஸ்.கே. பாலமுருகனும் போட்டியிடுகின்றனர்.