டிரெண்டிங்

ஆன்லைன் சூதாட்ட மோகம்... கடனாளியான தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

kaleelrahman

ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட மோகத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க முடியாமல் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவர் தினேஷ் (27). இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். செங்குன்றம் அண்ணா தெருவில் முதல் மாடியில் வசித்து வந்த இவர்களுக்கு ஓரளவே வருமானம் என்றாலும், தினேஷ், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் பல ஆயிரங்கள் கடனானதாக கூறப்படுகிறது. இருந்த போதும், ஆன்லைனில் இருந்த மோகத்தால் மேலும் மேலும் கடனாகியதால் தினேஷ் விரக்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மனைவி வெளியே சென்றிருந்த போது, தினேஷ் இன்று வீட்டில் உள்ள மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார்.

வெளியில் சென்ற மனைவி வீட்டிற்கு வந்து பார்த்தபோது தினேஷ் தூக்கிட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் தனது கணவரை உடனடியாக கீழிறக்கி தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார். அப்போது தினேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து செங்குன்றம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடன் சுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.