டிரெண்டிங்

தேர்தல் முடியட்டும் பிரதமர் யார் என்பதை பார்த்துக் கொள்ளலாம் - மம்தா பானர்ஜி

தேர்தல் முடியட்டும் பிரதமர் யார் என்பதை பார்த்துக் கொள்ளலாம் - மம்தா பானர்ஜி

webteam

எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது தற்போது தேவையற்றது என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மாபெரும் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. மெகா கூட்டணி அமைக்கும் பொருட்டு, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அந்த முயற்சியின் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முதல்நாள் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. 

ஆனால், எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி ஒரு கானல் நீர் என்று பாஜக விமர்சித்து வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக உள்ளார். காங்கிரஸ் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தெரிவிக்க முடியுமா என்றும் பாஜக கேள்வி எழுப்பி வருகிறது. ஆனால், பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் தான் பிரதமராவேன் என்று ஏற்கெனவே ராகுல் காந்தி கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது கூறியிருந்தார். 

பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்வி தொடர்ந்து வந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில், ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட தான் முன்மொழிவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், ஸ்டாலினின் இந்த கருத்தினை காங்கிரஸ் தலைவர்களே உறுதி செய்யாமல் நழுவி வருகின்றனர். 

அதோடு, மற்ற கட்சிகள் தலைவர்களும் ஸ்டாலின் கருத்தினை ஏற்கவில்லை. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலினின் கருத்து,  கூட்டணி கட்சிகளின் கருத்து இல்லை என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் குறித்து திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமன மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். “பிரதமர் வேட்பாளரை தெரிவிக்க வேண்டிய நேரம் இதுவல்ல. நாங்கள் மிகவும் வலிமையாக ஒன்றிணைந்து பணியாற்றுவோம். நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து வெற்றி பெறட்டும். அப்போது, எல்லா கட்சிகள் இணைந்து பிரதமர் யார் என்பதை முடிவு செய்வார்கள்” என்றார்.  

மேலும், பிரதமர் வேட்பாளருக்கான களத்தில் நீங்களும் உள்ளீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்த விவகாரம் தற்போது விவாதிக்கப்பட வேண்டிய தேவையில்லை. மேலும், நான் மட்டும் கூட்டணியில் இல்லை. நாங்கள் ஒருங்கிணைந்து அதனை முடிவு செய்வோம். முன் கூட்டியே எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது எதிர்கட்சிகளிடையே பிளவை உண்டாக்கும்” என்றார். 

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவலுக்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, ‘அது மிகவும் நல்ல விஷயம். மாநிலத்தில் உள்ள நிலைமைக்கு அது தேவையானதாக இருக்கும். அதனை நாங்கள் வரவேற்கிறோம்” என்றார்.

அதனால், எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அறிவிக்கப்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. காங்கிரஸ் கட்சியும் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்க தற்போது தயாராக இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.