கட்சி தொடங்கி 12 ஆண்டுகள் ஆகியும், தொகுதிகள் கேட்டு இன்னும் கையேந்தும் நிலையில் தான் சமத்துவ மக்கள் கட்சி உள்ளதாக அக்கட்சியில் இருந்து விலகிய மாவட்டச் செயலாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து கிச்சா ரமேஷ், குணசேகரன், தக்காளி முருகேசன், கிரிபாபு ஆகிய 4 மாவட்டச் செயலாளர்கள் விலகி உள்ளனர். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கட்சியின் தலைவர் சரத்குமாரை மாநில நிர்வாகிகள் சிலர் தவறாக வழிநடத்துவதாக குற்றஞ்சாட்டினர்.நேற்று கட்சி தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தமது வேட்பாளர்களை அறிவித்துவிட்டதாகவும், ஆனால் சமத்துவ மக்கள் கட்சி இன்னும் வேட்பாளர்களின் நேர்காணலை கூட நடத்தவில்லை என விமர்சித்தனர்.
வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட சமத்துவ மக்கள் கட்சி தயாராகி வருகிறது. இந்நிலையில் அக்கட்சியில் இருந்து மாவட்டச் செயலாளர்கள் விலகியுள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.