ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவட்டார், பேச்சிபாறை, தோவாளை, தடிக்காரன்கோணம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் கடையால், பொன்மனை ஆகிய பேரூராட்சிகளில் உள்ள 1,524 மலைவாழ் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மலைவாழ் மக்களின் வாழ்க்கைச் சூழலையும், எவ்வித தொழிலையும் செய்ய முடியாத நிலைமையையும் கருத்தில் கொண்டு நிவாரணத் தொகையாக 5,000 வழங்கப்படுவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஒகி புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணமும், உயிரிழந்த மீனவர் அல்லாதவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.