நடிகர் சங்கத்தையே வழிநடத்த தெரியாதவர்கள் நாட்டை திருத்த வருகிறேன் என்று கூறுவது எந்த வகையில் நியாயம் என்று நாகையில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து திருவாரூர் சென்ற தனியார் பேருந்து நேற்று ஆலங்குடி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
அதனைத்தொடர்ந்து ரஜினி கமல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், நடிகர் சங்கத் தேர்தலில் சங்க கட்டடம் கட்டுவதற்கு மூத்த நடிகராக இருந்து வழிநடத்த தெரியாதவர்கள் நாட்டை திருத்த வருகிறேன் என்று கூறுவது எந்த வகையில் நியாயம் என்றார். மேலும் நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். அடித்துக்கொள்கிறார்கள். இதற்குப் பெயரா நடிகர் சங்கம்? மூத்தவர்கள் வழிகாட்ட வேண்டியதுதானே? அதற்கு வழிகாட்ட முடியாதவர்கள் நாட்டிற்காக வழிகாட்ட போகிறார்கள்? வாய்ப்பே கிடையாது என்றார். மேலும் தமிழருவி மணியன் குறித்த ஒரு கேள்விக்கு முதலில் அவர் ஒரு தேர்தலில் நிற்கட்டும். ஓட்டு வாங்கட்டும். அதற்குப் பிறகு அவர் சொல்வதை கேட்போம் எனத் தெரிவித்தார்.