டிரெண்டிங்

வெறும் நிகழ்ச்சி மட்டுமல்ல... அரசியல் களத்திலும் சுழன்றடித்த பிக்பாஸ்!

JustinDurai

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி தீவிரமாக பணியாற்றி அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கி வருகிறார் கமல்ஹாசன். அதேநேரத்தில் இணையத்தில் வேறு ஒரு காரணத்திற்காகவும் பரபரப்பாக பேசப்பட்டார். அதற்கு காரணம் பிக்பாஸ். ஒரு தனியார் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ என்றாலும் இணையத்தில் அதற்கென தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.

தன்னுடைய பரப்பரப்பான அரசியல் பணிகளிலும் நிகழ்ச்சி தொகுப்பையும் கவனித்து அதனை முடித்துகொடுத்தார் கமல்ஹாசன். வெறும் நிகழ்ச்சி என்றில்லாமல் நிகழ்ச்சி தொகுப்பின் போதே நிகழ்கால அரசியல் பேசுவது, ஆளும்கட்சியை பகடி செய்வது, புத்தகங்களை அறிமுகம் செய்வது என கிடைத்த அரங்கை கமல்ஹாசன் பயன்படுத்தவும் தவறவில்லை. ஒரு நிகழ்ச்சி வெறும் பார்வையாளர்களோடு மட்டுமே இருந்து விடாமல் நிகழ்கால அரசியலுக்குள் சுழன்றது என்றால் அது பிக்பாஸ். முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை பிக்பாஸ் குறித்து பேசினார்கள். கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கலாசார சீரழிவு" என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

பிக்பாஸ் குறித்து பேசிய முதல்வர் பழனிசாமி, ''பிக்பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படியிருக்கும்? இந்நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு குடும்பம் கூட நல்லாயிருக்காது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்படி என்ன இருக்கிறது? சொல்லுங்க பார்க்கலாம். கமல் நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதாக இல்லை. நல்லாயிருக்கும் குடும்பத்தை கெடுப்பதுதான் அவர் வேலை. பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை கெட்டுப் போவார்கள் என்றார்கள். அதற்கு பதிலளித்த கமல், முதல்வர் பழனிசாமியும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதில் மகிழ்ச்சி என்றார். இப்படி அரசியல் வட்டாரத்திலும் கமலைச் சுற்றியும் பேசப்பட்ட பிக்பாஸ் 100 நாட்களை நிறைவு செய்து முடிவடைந்தது. ஆனாலும் அதன் அரசியல் பேச்சுகள் நிற்கவில்லை.

பிக்பாஸில் பங்கு பெற்ற ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டு கூட கமலஹாசனுக்கு கிடைக்காது என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் விமர்சனம் செய்தார். ரம்யா பாண்டியனுக்கு நானே 5 ஓட்டுக்கள் போட்டேன் என்றார். ஓவியா பங்கேற்ற பிக்பாஸும் அரசியல் பேசியது. ஓவியாவுக்கு ஓட்டு போட்ட 1.5 கோடி மக்களும் எனக்கு ஓட்டு போட்டிருந்தால் இந்நேரம் தமிழகத்தை காப்பாற்றியிருப்பேன் என்று ஆதங்கத்துடன் கூறி இருந்தார் அன்புமணி. அன்று முதல் இன்று வரை பிக்பாஸ் எனும் சுழல்காற்று அரசியல் வட்டாரத்திலும் சுழன்று வீசிக்கொண்டே தான் இருக்கிறது.