டிரெண்டிங்

இந்தியாவில் ஒரே மொழியை கற்பனை கூட செய்ய முடியாது: ப.சிதம்பரம் பேச்சு

இந்தியாவில் ஒரே மொழியை கற்பனை கூட செய்ய முடியாது: ப.சிதம்பரம் பேச்சு

webteam

இந்தியாவில் ஒரே மொழி, ஒரே உணவு என கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை வேலப்பன்சாவடியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் பிறந்தநாள் விழா நடைப்பெற்றது. இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் , காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தனது வாழ்த்துக்களை கூறினார். எனக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் முரண்பாடு உண்டு. ஆனால் பகை இல்லை என்றார். காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்குள் உள்ள முரண்பாடுகளை பகையாக மாற்றிக்கொள்ளக்கூடாது. இந்தியாவில் ஒரே மொழி ஒரே உணவு என கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது என்றார். பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. எல்லா மொழி, எல்லா மதத்திற்கும் சொந்தமான நாடு என்பதை நாம் கொண்டு செல்ல வேண்டும். அந்த இந்தியாவிற்கு தான் நம் முன்னோர்கள் சுதந்திரம் பெற்று தந்தனர். 

மேலும் பேசிய அவர்,  இந்தியாவின் மூத்த கட்சியான காங்கிரஸ் அந்த பண்முகத்தன்மையை காத்து வந்தது. திராவிட கட்சிகளும் தனக்கு சந்தர்பங்கள் கிடைக்கும் போது அதனை காத்து வந்தது. தற்போது இந்தியா என்ற அந்த மையக்கருத்துக்கு சவால் வந்துள்ளது. அந்த சவாலை முறியடித்து எல்லா மதங்களுக்கும் எல்லா மொழிகளுக்கும், எல்லா கலாச்சாரத்துக்கும் இந்தியா சொந்தமான நாடு என்பதை மீண்டும் அதை நிலைப்படுத்துவது நமது குறிக்கோள் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது என்றார்.