டிரெண்டிங்

இயற்கை உபாதைக்கு சென்ற வட மாநில செங்கல் சூளை தொழிலாளி - யானை தாக்கி உயிரிழப்பு

sharpana

கோவையில் செங்கல் சூளையில் பணியாற்றி வந்த  வட மாநில தொழிலாளி யானை தாக்கியதில் உயிரிழந்தார்.

 கோவை மாவட்டம் மாங்கரை, பெரிய தடாகம், சின்ன தடாகம், வீரபாண்டி, ஆகிய பகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது. இந்த செங்கல் சூளைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இந்த பகுதியில் ஏராளமான காட்டுயானைகள் உள்ளன.

 இந்த யானைகள் செங்கல் சூளையில் செங்கல் எரிக்க பயன்படுத்தப்படும் பனை மரத்தின் கூழை உண்பதற்காக வருவது வழக்கம். அவ்வாறு வரும் யானைகள் செங்கல் சூளைக்கு வெளியே நடமாடும் தொழிலாளர்களை தாக்குவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முறையான குடியிருப்புகள், கழிப்பிட வசதிகள் இல்லாததால் இயற்கை உபாதைகளை கழிக்க திறந்த வெளி  கழிப்பிடத்தை நாடுகின்றனர். பெரும்பாலும் காலை, மாலை நேரங்களில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு இவர்கள் செல்வதால் யானை மனித மோதல் ஏற்படுகிறது.

 இந்நிலையில் கோவை வனசரகத்திற்குட்பட்ட மாங்கரை சாலையில் உள்ள தனியார் செங்கல் சூளையில் பணி புரியும் சரித்துல் இஸ்லாம் என்ற இளைஞர் இரவு இயற்கை உபாதைகளை கழிக்க செங்கல்சூளைஒட்டியுள்ள இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒற்றை ஆண் யானை இஸ்லாமை தும்பிக்கையால் தூக்கி வீசி தந்தத்தால் குத்தியதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் மார்பிலும் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவரின் அலறல் சத்தத்தை கேட்ட செங்கல் சூளை தொழிலாளர்கள் சத்தங்களை எழுப்பி யானையை விரட்ட முயற்சி மேற்கொணடனர். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள் பட்டாசு மற்றும் சைரன் ஒலி எழுப்பி யானையை அங்கிருந்து விரட்டினர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த இளைஞரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.