டிரெண்டிங்

ஆட்டுச் சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம்... ரூ.1 கோடி வரை விற்பனையாகும் என எதிர்பார்ப்பு

ஆட்டுச் சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம்... ரூ.1 கோடி வரை விற்பனையாகும் என எதிர்பார்ப்பு

kaleelrahman

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் சந்தையில் ஆடு கோழி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.


திண்டுக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சந்தையாக அய்யலூர் ஆட்டுச் சந்தை உள்ளது. இச்சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு மற்றும் கோழி விற்பனை மும்முரமாக நடைபெறுவது வழக்கம். அய்யலூர் மட்டுமல்லாமல், அதைச் சுற்றியுள்ள வடமதுரை, கடவூர், எரியோடு, காணப்பாடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடு, கோழிகளை விற்பனை செய்ய இச்சந்தைக்கு கொண்டு வருவார்கள். திருச்சி, கரூர், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் இங்கு வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர். 


அதிகாலை 5 மணிக்கு தொடங்கி 10 மணி வரையில் இச்சந்தை நடைபெறும். பண்டிகைக் காலங்களில் இரவு 7 மணிவரை கூட சந்தை தீவிரமாக இயங்கும். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 30லட்சம் ரூபாய் முதல் விழா காலங்களில் அதிகபட்சமாக 1 கோடி ரூபாய் வரையிலும் விற்பனை நடக்கும்.

இந்நிலையில் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ஆடு, கோழிகளை வாங்கிச் செல்ல இந்த வார அய்யலூர் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி சமயத்தில் இறைச்சிக்கான தேவை அதிகமாக இருக்கும் என்பதால் 1,500-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தன. 

அதேபோல ஆட்டின் விலையும் அதிகரித்தே காணப்பட்டது. அதன்படி ஆடு ரூ.5ஆயிரம் முதல் ரூ.20,000 வரையில் விற்பனையானது. நாட்டுக்கோழி கிலோ ஒன்றிற்கு ரூ.450 வரையில் விற்பனையானது. இதனால் இன்று ஒருநாள் மட்டும் 1 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகும் என கூறப்படுகிறது.

கொரோனா காலத்தில் விதிமுறைகளை பின்பற்றாமல் எந்தவித தனிமனித இடைவெளியும் இல்லாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளனர்.