அதிமுக கொடியை வேறு யாரேனும் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக அலுவலகம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வெளியான மறுநாளே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் அணி சார்பில் இன்னும் வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனிக்கொடி பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “இரட்டை இலை சின்னம், அ.இ.அ.தி.மு.க என்ற கட்சியின் பெயரை படுத்துவது தொடர்பாகத்தான் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகம், கொடியை பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பில் எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, அதிமுகவின் சின்னம், கொடியை வேறு யாரேனும் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். கட்சியின் சின்னம், கொடி தொடர்பான அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள தங்களுக்கே உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.