பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
குஜராத் தேர்தல் பரப்புரையின் போது மன்மோகன் சிங், ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் பாகிஸ்தான் அதிகாரிகளை ரகசியமாக சந்தித்ததாக பிரதமர் மோடி கூறினார். பிரதமரின் இந்த பேச்சுக்கு அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. மன்மோகன் சிங் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. மன்மோகன் சிங்கிற்கு எதிரான பேச்சுக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இதனால், கடந்த இரண்டு நாட்களாக மக்களவை, மாநிலங்களவையில் கடும் அமளி நிலவியது. அதேபோல், இன்றும் பிரதமர் மன்னிப்பு கேட்கக் கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் பிரதமர் மோடி இருக்கும் போதே காங்கிரஸ் உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால், மக்களவையும், மாநிலங்களவையும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று துணை குடியரசு தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், “இது சரியான அணுகுமுறை இல்லை. யாரும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை. அவையில் எதுவும் நடைபெறவில்லை. அவையில் பேசினால் தான் நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார்.