நேதாஜி மரணம் தொடர்பாக மக்களுக்கு தவறான தகவல் கொடுப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் தொடர்பாக மத்திய அரசு பல்வேறு ஆவணங்களை வெளியிட்டு வருகிறது. தைவான் நாட்டில் 1945-ம் ஆண்டு நேரிட்ட விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் இறந்துவிட்டார் என்கிறது மத்திய அமைச்சகத்தின் ஆவணங்கள்.
ஆனால், 1945-ம் ஆண்டு விமான விபத்தில் இறக்கவில்லை என்ற கருத்தும் இன்றும் இருந்து வருகிறது. பிரான்ஸை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஒருவரும் இந்தக் கருத்தை கூறியுள்ளார்.
இந்நிலையில், நேதாஜி விமான விபத்தில் இறந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் சுகேந்து சேகர் கூறியுள்ளார். மேலும், “நேதாஜி விமான விபத்தில் இறந்ததை எந்த நாட்டு அரசாங்கமும் இதுவரை நிரூபிக்கவில்லை. கடந்த 73 ஆண்டுகளாக மத்திய அரசு மக்களை தவறான கருத்தால் வழிநடத்தி வருகிறது. தவறான கருத்துக்கள் வெளியிடுவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
நேதாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நாடாளுமன்ற செயலகம் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் நேதாஜி விமான விபத்தில் இறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.