துணை பொதுச்செயலாளர் நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று டிடிவி தினகரன் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
மதுரை மேலூரில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், " அதிமுக-வை பொறுத்தவரை துணைப் பொதுச்செயலாளரை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. 27 பேர் சேர்ந்து தான் இந்த முடிவை எடுத்துள்ளனர். அதிமுக-வில் அடிமட்ட தொண்டர்களின் மனநிலையை உணர்ந்து தான் கட்சி செயல்பட வேண்டும். இதுதான் கட்சி விதிகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே அவர்கள் எடுத்திருக்கும் முடிவு தவறானது" என கூறினார்.
முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க அம்மா அணியின் கூட்டத்தில், தினகரனின் அறிவிப்புகள் கட்சியை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டதே கட்சியின் சட்டத்துக்கு விரோதமானது என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.