தஞ்சாவூர் அருகே புதிதாக மதுபானக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் அருகேயுள்ள கரந்தையில் புதிதாக மதுபானக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தஞ்சை கும்பகோணம் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 7 ஆண்டுகளாக இப்பகுதியில் மதுபானக்கடை இல்லாமல் நாங்கள் நிம்மதியாக இருந்தோம். தற்போது நெடுஞ்சாலையில் மதுபானக்கடை அமைப்பதால் அதிக விபத்துகள் ஏற்படும். மேலும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவிகள், பெண்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே இப்பகுதியில் மதுபானக்கடை அமைக்கக் கூடாது; மீறி அமைத்தால் கடுமையான போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரித்தனர். பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தஞ்சை கும்பகோணம் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.