டிரெண்டிங்

‘எந்த மாநிலத்திலும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை’ - மாயாவதி திட்டவட்டம்

‘எந்த மாநிலத்திலும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை’ - மாயாவதி திட்டவட்டம்

rajakannan

எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். 

வருகின்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் அமையும் கூட்டணியில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் இணையும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், காங்கிரஸ் கட்சியை தவிர்த்துவிட்டு உத்தரப் பிரதேசத்தில் தங்கள் கூட்டணியை சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் அறிவித்தது. 

சமீபத்தில் உத்தரப்பிரதேசத்திற்கான தொகுதி பங்கீட்டையும் அகிலேஷ் - மாயாவதி கூட்டாக அறிவித்தனர். மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் 38, சமாஜ்வாடி 37 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தனர். தங்களுடைய கூட்டணி கட்சிகளான ராஷ்டிரீய லோக் தள் கட்சிக்கு 3 இடங்களை ஒதுக்கி இருந்தன.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில், ராகுல் காந்தி, சோனியா காந்தியின் அமேதி, ரேபரேலி தொகுதிகளை மட்டும் விட்டுவிட்டு 78 தொகுதிகளில் இருகட்சிகளும் கூட்டணி அமைத்து விட்டன. அதேபோல், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்டிற்கான தொகுதி பங்கீட்டை பகுஜன் சமாஜ் - சமாஜ்வடி கூட்டாக அறிவித்துள்ளது. 

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் காங்கிராஸ் கட்சியுடனான கூட்டணி குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவிய நிலையில் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என மாயாவதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதேபோல், நேர்மையான உள்நோக்கத்தின் அடிப்படையிலும், ஒருமித்த மரியாதையின் பேரிலும் தேர்தலுக்கு முன்பாக சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அவர் கூறினார். மேலும், பாஜகவை தோற்கடிக்க சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி மட்டும் போதுமானது என்றும் மாயாவதி தெரிவித்தார்.