டிரெண்டிங்

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - திமுக மனு

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - திமுக மனு

webteam

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது. 

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக கொறடா ராஜேந்திரன் இருவரும் சமீபத்தில் சபாநாயகர் தனபாலை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, இந்தச் சந்திப்பில் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் எனக் கருதப்படும் பிரபு, ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

அமமுகவில் எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு மூவரும் பொறுப்பில் இருப்பதாக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அந்தப் புகாரின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 7 நாட்களுக்குள் 3 எம்.எல்.ஏக்களும் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது. பேரவை செயலாளர் சீனிவாசனை நேரில் சந்தித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு அளித்தார். 

முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில் 3 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் எனத் தெரிவித்திருந்தார். 

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக ஒரு முறை கொண்டு வந்தது. ஆனால் அது தோல்வி அடைந்தது. இந்நிலையில் தற்போது திமுக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்காக மனு அளித்துள்ளது.