குடியரசு துணை தலைவர் தேர்தலில் கோபாலகிருஷ்ண காந்தியை ஆதரிக்க ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்துள்ளது.
பீகாரில் மகா கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் பாஜகவுடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைத்திருக்கிறார். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து விட்டாலும் குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரான வெங்கய்ய நாயுடுவை ஆதரிக்க முடியாது என்றும், ஏற்கனவே அறிவித்தபடி எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான கோபாலகிருஷ்ண காந்தியை ஆதரிப்பது என்றும் நிதிஷ்குமார் முடிவு செய்திருக்கிறார்.
ஏற்கனவே, பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த போது நிதிஷ்குமார் தங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் எதிர்ப்பு அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை திருப்திப்படுத்தும் வகையிலும் கோபாலகிருஷ்ண காந்தியை ஆதரிக்க முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக பாட்னாவில் இன்று மாலை கட்சி நிர்வாகிகளுடன் நிதிஷ் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.