குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்திற்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்த படு முயற்சி மேற்கொண்ட நிதிஷ்குமார், தற்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கே ஆதரவு அளித்திருக்கிறார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் அடுத்த மாதத்தோடு நிறைவடைவதால் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை மாதம் 17-ல் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு அளிப்பதாக தெலுங்கு தேசம் மற்றும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிகள் ஏற்கனவே தெரிவித்துவிட்டன.
இந்நிலையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் ராம்நாத் கோவிந்திற்கு ஆதரவு அளித்துள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து பாஜக-வைத் வீழ்த்தின. இதனையடுத்தே நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில் பாஜக அறிவித்திருக்கும் வேட்பாளருக்கு நிதிஷ்குமார் ஆதரவு அளித்திருப்பது ஆளும் கூட்டணிக்குள் சிறிது சச்சரவை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.