டிரெண்டிங்

காங். எம்பி சசி தரூரை நலம் விசாரித்த பாஜக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

webteam

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் எம்பி சசி தரூரை, பாஜக கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கு இடையே ரஃபேல் விமான ஊழல் புகார் குறித்த வார்த்தை போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஆகவே இரண்டு கட்சியினரும் தேர்தல் களத்தில் எதிரும் புதிருமாக போட்டிப் போட்டு வருகின்றனர்.

பாஜக, காங்கிரஸ் இடையே கருத்து மோதல்கள் நிலவி வரும் நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காங். எம்பி சசி தரூரை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அரசியல் நாகரீகமான இந்தச் சந்திப்பு குறித்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்கள் முன்பு கேரள தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ள கோயிலுக்கு சென்ற போது, சசி தரூர் கால் வழுக்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டார். பின்னர் அவருக்கு தலையில் 6 தையல் போடப்பட்டது. அவர் இப்போது தீவிர சிக்கிச்சை பெற்று வருகிறார். அவரை 24 மணிநேர கண்காணிப்பில் மருத்துவமனை நிர்வாகம் வைத்துள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரரையில் ஈடுபட்டு வந்த மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தனது பரப்புரைக்கு இடையே மருத்துவமனையிலுள்ள காங் எம்பி சசி தரூரை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சசி தரூர், “பரப்புரைக்கு இடையே மருத்துவமனைக்கு வந்து நிர்மலா சீத்தாராமன் என்னை தொட்டு நலம் விசாரித்தார். இந்திய அரசியலில் இந்தப் பண்பு மிக அரிது. அதற்கு நல்ல உதாரணமாக இவரைப் பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

அதே போல் இன்னொரு ட்வீட்டில், “எதிர்க்கட்சியை சேர்த்த சி. திவாகரன் காலையில் தொலைபேசியில் அழைத்தார். விரைவில் நீங்கள் குணமடைய வேண்டும் என்றார். மருத்துவமனை அதிகாரிகளிடம் பேசியிருக்கிறேன், தைரியத்தை இழந்துவிட வேண்டாம் என்றார். நான் முன்பைவிட உறுதியாக இருக்கிறேன் என்று கூறினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.