ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கேலிக்கூத்தாகிவிட்டது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார்.
பணப்பட்டுவாடா புகாரால் கடந்த முறை ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. எனவே இந்தமுறை பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் பணப்பட்டுவாடாவும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல லட்ச ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் இதுவரை 100 கோடி ரூபாய் அளவிற்கு பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கேலிக்கூத்தாகிவிட்டது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார். தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்திய அவர், பணம் கொடுப்பவர், வாங்குபவர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலை வந்தால் தான் இப்பிரச்னைகக்கு தீர்வு கிடைக்கும் என தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகரில் சர்வ சாதாரணமாக பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கூறிய அவர், இத்தேர்தல் இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு சவாலாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆர்.கே.நகரில் நியாயமாக தேர்தல் நடைபெறவில்லை என்றால் தேர்தலை நடத்தி பயன் இல்லை என ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.