குடும்ப வாழ்க்கை குறித்து அனுபவமே இல்லாதவர்கள் எனது குடும்பத்தை விமர்சிக்கக் கூடாது என பிரதமர் மோடிக்கு சரத்பவார் பதில் கொடுத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி,தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை மிக கடுமையாக பேசியிருந்தார். மேலும் சரத்பவாரின் குடும்ப பிரச்னைகளால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குளறுபடி ஏற்படுவதாகவும், சரத்பவாரின் பிடியிலிருந்து கட்சி நழுவி விட்டதாகவும் மோடி விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் அந்தக் கடுமையான விமர்சனத்திற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பதிலடி கொடுத்துள்ளார். அதில் தாமும் தமது சகோதரர்களும் பாரம்பரிய சூழலில் நல்லொழுக்கத்துடன் வளர்ந்தவர்கள். குடும்பம் குறித்து எந்த அனுபவமும் இல்லாத ஒருவர் அல்லது தனது குடும்பம் தற்போது எங்கே இருக்கிறது என்று எந்த எண்ணம்கூட இல்லாதவர், மற்றவர்களின் குடும்பம் குறித்து பேசுவது மிகவும் தவறு எனப் பதிலடி கொடுத்துள்ளார்.