நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் தயாரித்த வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் முழு அளவிலான ஊரடங்கு அறிவிக்கபட்டு சிறிது சிறிதாக தளர்வு அறிவிக்கபட்டு இயல்பு நிலைக்கு தமிழகம் திரும்பி வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் தற்போது பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊசி பாசி விற்று வந்த நரிக்குறவர்கள் தற்போது வாழ்வாதாரம் இன்றி சிரமப்படும் நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயதொழில் பயிற்சியான சானிடைசர் தயாரிப்பது, பினாயில், வாசிங் படவுர், சோப் போன்றவை தயாரித்து விற்பனை செய்யும் வகையில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் நரிக்குறவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இதையடுத்து தற்போது ஆட்சியர் அலுவலகத்தில் அதன் முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில்,
‘’மகளிர் திட்டம் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்க பயிற்சி கொடுத்து உள்ளோம். 7 நாட்களில் இந்த பயிற்சியை கற்று கொண்டு தயாரிக்க ஆரம்பித்து விட்டனர். தொடர்ந்து தையல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அவர்களது வாழ்வாதாரம் மேம்படும். முதற்கட்டமாக சுய உதவி குழுக்கள் மூலமாக அதனை விற்பனை செய்ய உள்ளனர்’’ என அவர் தெரிவித்தார்.