அனைவரின் ஆலோசனைகளையும் கேட்டு புதிய இந்தியாவை உருவாக்கும் பணியை மேற்கொள்வோம் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்பிக்களின் கூட்டம் டெல்லி இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் முன்மொழிந்தனர்.
அதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். நரேந்திர மோடி, பிரதமராவதற்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்று கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
பின்னர், இந்திய அரசமைப்பு சாசன புத்தகத்தை வணங்கிவிட்டு தனது உரையை தொடங்கினார் நரேந்திர மோடி. “புதிய கடமைகளை முழுமையாக நிறைவேற்ற தயாராக உள்ளோம். அனைவரும் ஒன்றிணைந்து புதிய இந்தியாவை கட்டமைப்போம், மாற்றுவோம். யார் சேவை செய்வார்கள் என்பதை அறிந்து மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.
அனைவரின் ஆலோசனைகளையும் கேட்டு புதிய இந்தியாவை உருவாக்கும் பணியை மேற்கொள்வோம். புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான எங்களின் பயணத்திற்கு புதிய பாதை கிடைத்துள்ளது. 2019இல் இந்திய மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பு உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது” என்று பேசினார் மோடி.