டிரெண்டிங்

மருத்துவ கலந்தாய்வு நடத்த நிர்வாக ரீதியில் நெருக்கடி - நாராயணசாமி புகார்

மருத்துவ கலந்தாய்வு நடத்த நிர்வாக ரீதியில் நெருக்கடி - நாராயணசாமி புகார்

webteam

புதுச்சேரியில் மாணவர்களின் நலனை பாதிக்கும் வகையில் மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த நிர்வாக ரீதியில் நெருக்கடி வருவதாக அம்மாநில முதலமைச்சர் நார‌யணசாமி புகார் தெரிவி‌த்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியதாகவும், இதை அவர் பரிசீலிப்பதாக கூறியதாகவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் தமிழக அரசும் இதே கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்துள்ளது என்றும், தமிழக அரசின் பாடத்திட்டத்தை புதுச்சேரி அரசு பின்பற்றி வருகின்றது எனவே நீட் தேர்வில் மத்திய அரசு நல்ல முடிவை அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாக நாராயணசாமி கூறியுள்ளார். 

மேலும் புதுச்சேரியில் மருத்துவ படிப்பிற்கான அரசு இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடத்தி முடித்த பின்பு நிர்வாக ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் மற்றும் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் முடிவை எதிர்நோக்கி கலந்தாய்வை ஒத்தி வைத்திருப்பதாக நாராயணசாமி தெரிவித்தார். இந்நிலையில் மாணவர்களின் நலனை பாதிக்கும் வகையில் கலந்தாய்வை உடனடியாக நடத்த நிர்வாக ரீதியாக நெருக்கடி வருவதாக மறைமுகமாக ஆளுநர் கிரண்பேடியை குற்றம்சாட்டினார். ஏனெனில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என கிரண்பேடி கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.