முந்தைய தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டபோது திமுகவை கடுமையாக சாடிய நாஞ்சில் சம்பத், தற்போது அதே வார்த்தைகளைக் கூறி தனது விமர்சனத்திற்கு நேர்மாறாக பேசியுள்ளார்.
ஒருவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அவரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதில் நாஞ்சில் சம்பத் வல்லவர். தனது வார்த்தைகளால் எதிர்கட்சியினரை தெறிக்க விடுவார்.
சிறந்த பேச்சாளரும் எழுத்தாளருமான இவர் மதிமுக மூலமாக அரசியலுக்கு வந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு டிடிவி தினகரனுடன் இணைந்த நாஞ்சில் சம்பத், பின்னர் அவர் கட்சியில் இருந்தும் விலகி இனி அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், முந்தைய தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டபோது திமுகவை கடுமையாக சாடிய நாஞ்சில் சம்பத், தற்போது அதே வார்த்தைகளைக் கூறி தனது விமர்சனத்திற்கு நேர்மாறாக பேசியுள்ளார். இது சமூக ஊடகங்களிலும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
திமுக குறித்து அன்று நாஞ்சில் சம்பத் பேசியது : “திராவிட முன்னேற்ற கழகம் தரகுக்கடை. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தமிழர்கள் கோட்டம். திமுக வர்த்தகப்பண்ணை. அதிமுக வித்தகப்பாசறை. திமுக எலெக்ஷனுக்காகவும் கலெக்ஷனுக்காகவும் இருக்கிற கட்சி. அதிமுக சர்வீஸ்காகவும் சாக்ரஃபைஸ்காகவும் இருக்கிற கட்சி. திமுக முத்தக்காட்சிகளால் நிரம்பிய கூடாரம். அதிமுக ரத்த சாட்சிகளால் வியாபிக்கப்பட்ட லட்சிய மாளிகை. ஏழை, எளிய தொண்டர்களின் கண்ணீரால் ரத்தத்தால் கட்டப்பட்ட மாளிகை இது”.
திமுக குறித்து இன்று நாஞ்சில் சம்பத் பேசியது : “திமுக எலெக்ஷனுக்காகவும் கலெக்ஷனுக்காகவும் இருக்கிற கட்சி அல்ல. இது சர்வீஸ்காகவும் சாக்ரஃபைஸ்காகவும் இருக்கிற இயக்கம். இது வர்த்தகப்பண்ணை அல்ல. இது வித்தகப்பாசறை. இது தரகுக்கடை அல்ல. இது தமிழர்களின் கோட்டம். இது முத்தக்காட்சிகளால் நிரம்பிய கூடாரம் அல்ல. ரத்த சாட்சிகளால் வியாபிக்கப்பட்ட லட்சிய மாளிகை. ஒரு தலைவன் படிப்படியாக வளர்ந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறார்”.