வைகோவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள நிலையில், மதிமுகவில் நாஞ்சில் சம்பத் மீண்டும் இணைகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதிமுகவில் இருந்த நாஞ்சில் சம்பத், 2012 ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவர் மறைவுக்குப் பின் சசிகலா தலைமையிலும், டிடிவி தினகரன் அணியிலும் செயல்பட்டு வந்தார். டிடிவி அணியில் முக்கியத்துவம் இல்லாத காரணத்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அவர் தெரிவித்தார்.
சமீப காலமாக அரசியலில் இருந்து நாஞ்சில் சம்பத் ஒதுங்கி இருந்தார். இருப்பினும் மதிமுகவில் அவர் இணைவதாக தகவல்கள் வெளியானது. இதனை நாஞ்சில் சம்பத் மறுத்துவிட்டார். இதனிடையே, சென்னையில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவர் சந்தித்து பேசினார். இதனால், மீண்டும் அவர் மதிமுகவில் இணையப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமாரியில் புதிய தலைமுறைக்கு நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியில், “தேவைப்பட்டால் மக்களுக்காக வைகோவுடன் இணைந்து போராட தயார்” என்று கூறியுள்ளார். மேலும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் பிதாமகன், கதாநாயகன் வைகோதான் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
முன்னதாக, நாஞ்சில் சம்பத் தனது ட்விட்டரில், “மக்கள் மன்றத்திலும் நீதி மன்றத்திலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இப்பொழுது நீதிமன்றத்தின் வாசலிலும் அரசாங்கத்தின் தாழ்வாரங்களிலும் தவம் கிடக்கிறது வேதாந்தா நிர்வாகம். இப்பொழுது மூடி இருப்பது இடைக்கால ஏற்பாடு” என்று கூறியிருந்தார்.
மற்றொரு ட்விட்டில், “இன்னொரு நாள் அது மூடப்படும். அப்போது ஸ்டெர்லைட் நாயகன் வைகோவிற்கு தூத்துக்குடி மக்களே விழா எடுப்பார்கள். குட்டிச்சுவர்கள் ஒருகாலமும் கோபுரம் ஆவதில்லை. குட்டை ஒருக்காலும் சமுத்திரம் ஆவதில்லை” என்றும் நாஞ்சில் சம்பத் வைகோவை புகழ்ந்து இருந்தார்.