தமிழ்நாடு தேடிக்கொண்டிருந்த தலைவனை ஆர்.கே.நகர் அங்கீகாரம் செய்து தந்துள்து என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரனை நாஞ்சில் சம்பத் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தென்திசை குமரி முதல் திருத்தணி மலையின் எல்லை வரை முகம் தெரியாத தம்பிமார்கள், டிடிவி தினகரனை ஆராதிக்கிறார்கள். தமிழ்நாடு தேடிக்கொண்டிருந்த தலைவனை ஆர்.கே.நகர் அங்கீகாரம் செய்து தந்துள்து. ஆர்.கே.நகர் மக்கள் ஒட்டுமொத்த தமிழக மக்களின் நன்றிக்குரியவர்கள். எல்லா திசைகளும் திரும்ப திரும்ப டிடிவி தினகரன் பெயரை உச்சரிக்க தொடங்கியிருக்கின்றன. வானமும் டிடிவி தினகரனை வழிமொழிகிறது. வரலாற்று மாற்றம் தமிழ்நாட்டிற்கு தேவை என்றால் அது டிடிவி தினகரனால் மட்டுமே முடியும் என்பதை ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு காட்டுகிறது” என்றார்.
மேலும் பேசிய அவர், “சுயேட்சை வேட்பாளர் என்று கொச்சைப்படுத்தினார்கள். ஆனால் சுயேட்சை இல்லை. அவர் தான் சுயம்பு என்பதை ஆர்.கே.நகர் மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கின்ற கட்சி, இன்பத் தமிழ்நாட்டை ஆளுகின்ற கட்சி, இன்பத் தமிழ்நாட்டை ஆளப்போகிறோம் என கனவில் மிதந்திருக்கும் 3 கட்சிகள் பிரஷர் குக்கரில் வெந்து தணிந்திருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் கதிகலங்கி இருக்கிறார்கள். கட்சிக்கு துரோகம் செய்ததாக நான் உள்பட பலரை கட்சியிலிருந்து நீக்கியிருப்பதாக ஓபிஎஸ் கூறியிருக்கிறார். கட்சிக்கு துரோகம் செய்தவரை நீக்குவதாக இருந்தால் முதலில் ஓபிஎஸ்தான் நீக்கப்பட வேண்டும். இரட்டை இலையை முடக்கி, கட்சியின் அங்கீகாரத்தை கேள்விக்குறியாக்கி, டெல்லிக்கு காவடியெடுத்து, தமிழ்நாட்டையே காட்டிக்கொடுத்த எட்டப்பர்கள் எங்களை துரோகிகள் என்ற சொல்வதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது. அவர்கள் நீக்கியதால் நாங்கள் நெஞ்சு உடைந்து போகவில்லை” என நாஞ்சில் சம்பத் கூறினார்.