அதிமுக அலுவலகத்திற்குள் இனி ஒருக்காலும் நுழைய முடியாது என்பதால் தனி அலுவலகத்தை டிடிவி தினகரன் திறந்திருப்பதாக புரட்சித் தலைவி நமது அம்மா நாளிதழ் கூறியுள்ளது.
ஸ்லீப்பர் செல் என்று கூறி வந்த டிடிவி தினகரனை விஷப் பாம்பு என்றும் நாளிதழில் விமர்சிக்கப்பட்டுள்ளது. டோக்கன் கொடுத்து வாக்குகளை பெற்ற மாதிரி தொண்டர்களை விலைபேசி வாங்க முடியாது என்பதை அறிந்து தனி அலுவலகம் திறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆர்.கே.நகர் வெற்றிக்கு உதவிய திமுகவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி பிறந்தநாளிலேயே கட்சி அலுவலம் திறக்கப்பட்டிருப்பதாகவும் புரட்சித் தலைவி நமது அம்மா நாளிதழ் விமர்சித்துள்ளது.
முன்னதாக சென்னை அசோக்நகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று திறந்து வைத்தார். தலைமை அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சிக் கொடியையும் அவர் ஏற்றி வைத்தார். திறப்பு விழா நிகழ்ச்சியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், மாநிலங்களவை எம்.பி. சசிகலா புஷ்பா மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.