டிரெண்டிங்

"வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கணும்" - வங்கியில் ரூ.46 கோடி கடன் கேட்ட சுயேச்சை வேட்பாளர்

kaleelrahman

நாமக்கல்லில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வங்கியில் 46 கோடி ரூபாய் கடன் கேட்ட சுயேட்சை வேட்பாளரின் செயலால் வங்கி மேலாளர் அதிர்ச்சியடைந்தார்.

தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் அஹிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் சார்பில் ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இன்று அவர், காந்தி வேடமணிந்து தனது சின்னமான கிரிக்கெட் பேட் மற்றும் ஹெல்மெட்டுடன் நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சென்று வங்கி மேலாளரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் " விஜய் மல்லையா உள்ளிட்டோரின் 68 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகையை எஸ்.பி.ஐ வங்கி தள்ளுபடி செய்துள்ளது. அதேபோல் நாமக்கல் தொகுதியில் உள்ள 2 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையிலும் வாக்காளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகையாக வழங்க நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தமக்கு வெறும் 46 கோடி ரூபாய் மட்டும் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் எனவும் அதனை தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையை வைத்து வழங்கவேண்டும்' எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த மனுவை வாங்கிப் படித்த வங்கி மேலாளர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் உயர் அதிகாரிகளிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தி அந்த மனுவை பரிசீலனை செய்வதாக வங்கி மேலாளர் தெரிவித்தார். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வங்கியில் கடன் கேட்ட வேட்பாளரால் நாமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.